- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட் களத்தார் செவ்வணத்தார்
- கல்லை வளைத்தார் என்றன்மனக் கல்லைக் குழைத்தார் கங்கணத்தால்
- எல்லை வளைத்தார் தியாகர்தமை எழிலார் ஒற்றி எனும்நகரில்
- ஒல்லை வளைத்துக் கண்டேன்நான் ஒன்றும் உரையா திருந்தாரே.
- இருந்தார் திருவா ரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில்
- பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
- விருந்தார் திருந்தார் புரமுன்தீ விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
- தருந்தார் காம மருந்தார்இத் தரணி இடத்தே தருவாரே.
- தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
- மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார்
- திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
- வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
- வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
- தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
- சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
- பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- வழுத்தார் புரத்தை எரித்தார்நல் வலத்தார் நடன மலரடியார்
- செழுத்தார் மார்பர் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- கழுத்தார் விடத்தார் தமதழகைக் கண்டு கனிந்து பெருங்காமம்
- பழுத்தார் தம்மைக் கலந்திடநற் பதத்தார் என்றும் பார்த்திலரே.
- பாரா திருந்தார் தமதுமுகம் பார்த்து வருந்தும் பாவைதனைச்
- சேரா திருந்தார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாரா திருந்தார் இன்னும்இவள் வருத்தங் கேட்டும் மாலைதனைத்
- தாரா திருந்தார் சலமகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.
- சடையில் தரித்தார் ஒருத்திதனைத் தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
- புடையில் தரித்தார் மகளேநீ போனால் எங்கே தரிப்பாரோ
- கடையில் தரித்த விடம்அதனைக் களத்தில் தரித்தார் கரித்தோலை
- இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என்னுளத்தே.
- உளத்தே இருந்தார் திருஒற்றி யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
- களத்தே வதிந்தார் அவர்என்றன் கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
- இளத்தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பன்றே
- வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.
- வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
- தருந்தேன் அமுதம் உண்டென்றும் சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
- திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
- மருந்தேன் மையற் பெருநோயை மறந்தேன் அவரை மறந்திலனே.