- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மாடொன் றுடையார் உணவின்றி மண்ணுன் டதுகாண் மலரோன்றன்
- ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார் ஊரை மகிழ்வோ டுவந்தாலங்
- காடொன் றுடையார் கண்டமட்டுங் கறுத்தார் பூத கணத்தோடும்
- ஈடொன் றுடையார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார் பேயோ டாடிப் பவுரிகொண்டார்
- பத்தர் தமக்குப் பணிசெய்வார் பணியே பணியாப் பரிவுற்றார்
- சித்தர் திருவாழ் ஒற்றியினார் தியாகர் என்றுன் கலைகவர்ந்த
- எத்தர் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- கடுத்தாழ் களத்தார் கரித்தோலார் கண்ணால் மதனைக் கரிசெய்தார்
- உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத்
- தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித் துதிக்க ஒருகால் அம்பலத்தில்
- எடுத்தார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- உரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
- கரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
- வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
- இரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்
- மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்
- பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
- எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- ஆக்கம் இல்லார் வறுமையிலார் அருவம் இல்லார் உருவமிலார்
- தூக்கம் இல்லார் சுகம்இல்லார் துன்பம் இல்லார் தோன்றுமல
- வீக்கம் இல்லார் குடும்பமது விருத்தி யாக வேண்டுமெனும்
- ஏக்கம் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார் உறவொன் றில்லார் பகைஇல்லார்
- பேரும் இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சில்லார்
- நேரும் இல்லார் தாய்தந்தை நேயர் தம்மோ டுடன்பிறந்தோர்
- யாரும் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தங்கு மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார்புனைவார்
- துங்கும் அருட்கார் முகில்அனையார் சொல்லும் நமது சொற்கேட்டே
- இங்கும் இருப்பார் அங்கிருப்பார் எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
- எங்கும் இருப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
- முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
- புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
- எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- மாறித் திரிவார் மனம்அடையார் வணங்கும் அடியார் மனந்தோறும்
- வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகுவிலை
- கூறித் திரிவார் குதிரையின்மேற் கொள்வார் பசுவிற் கோல்வளையோ
- டேறித் திரிவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.