- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- தேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி
- தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
- கானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.
- திருமால் வணங்கும் ஒற்றிநகர் செழிக்கும் செல்வத் தியாகர்அவர்
- கருமால் அகற்றுந் தொண்டர்குழாம் கண்டு களிக்க வரும்பவனி
- மருமாண் புடைய மனமகிழ்ந்து மலர்க்கை கூப்பிக் கண்டலது
- பெருமான் வடுக்கண் பெண்ணேநான் பெற்றா ளோடும் பேசேனே.
- சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் அழகு ததும்ப வரும்பவனி
- நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டலது
- பால்ஆர் குதலைப் பெண்ணேநான் பாயிற் படுக்கை பொருந்தேனே.
- செல்வந் துறழும் பொழில்ஒற்றித் தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்
- வில்வந் திகழும் செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும்பவனி
- சொல்வந் தோங்கக் கண்டுநின்று தொழுது துதித்த பின்அலது
- அல்வந் தளகப் பெண்ணேநான் அவிழ்ந்த குழலும் முடியேனே.
- சேவார் கொடியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- பூவார் கொன்றைப் புயங்கள்மனம் புணரப் புணர வரும்பவனி
- ஓவாக் களிப்போ டகங்குளிர உடலங் குளிரக் கண்டலது
- பாவார் குதலைப் பெண்ணேநான் பரிந்து நீரும் பருகேனே.
- சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- உற்றங் குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும்பவனி
- சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின்அலது
- முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் முடிக்கோர் மலரும் முடியேனே.
- சிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- சந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி
- முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது
- கந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான் கண்ர் ஒழியக் காணேனே.
- தென்னஞ் சோலை வளர்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் பிறங்கா நிற்க வரும்பவனி
- மன்னுங் கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்திக் கண்டலது
- துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் சோறெள் ளளவும் உண்ணேனே.
- சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- வந்தார் கண்டார் அவர்மனத்தை வாங்கிப் போக வரும்பவனி
- நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டலது
- பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் பாடல் ஆடல் பயிலேனே.
- செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- மிக்கற் புதவாண் முகத்தினகை விளங்க விரும்பி வரும்பவனி
- மக்கட் பிறவி எடுத்தபயன் வசிக்க வணங்கிக் கண்டலது
- நக்கற் கியைந்த பெண்ணேநான் ஞாலத் தெவையும் நயவேனே.