- நற்றாய் நயத்தல்
- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன்
- வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார்
- நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
- கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார்
- மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார்
- கருவில் தோன்றும் எங்கள்உயிர் காக்க நினைத்த கருணையினார்
- குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- என்னா ருயிர்போல் மகளேநீ என்ன தவந்தான் இயற்றினையோ
- பொன்னார் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொற்பதத்தார்
- தென்னார் ஒற்றித் திருநகரார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொன்னார் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
- மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
- வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
- கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
- மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
- பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
- கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- வில்லார் நுதலாய் மகளேநீ மேலை நாட்செய் தவம்எதுவோ
- கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண்விழித்தார்
- வில்லார் விசையற் கருள்புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
- கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ
- வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார்
- கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால்
- கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
- சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
- காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
- கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மலைநேர் முலையாய் மகளேநீ மதிக்கும் தவமே தாற்றினையோ
- தலைநேர் அலங்கல் தாழ்சடையார் சாதி அறியாச் சங்கரனார்
- இலைநேர் தலைமுன் றொளிர்படையார் எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
- குலைநேர் சடையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
- வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண் றுடையார் வெள்விடையார்
- பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
- குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.