- செவிலி கழறல்
- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
- அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
- உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
- இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்
- திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்
- பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ
- இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
- கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
- இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
- தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
- படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
- இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே.
- திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
- எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
- உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
- இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
- மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
- ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
- ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
- ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
- ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
- உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
- தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
- எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்
- ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ
- நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ
- ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
- வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
- கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
- எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.