- தலைவி கழற் றெதிர்மறுத்தல்
- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
- அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
- திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
- கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
- அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
- ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
- கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
- கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
- வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்
- கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
- அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
- துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்
- கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
- ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்
- நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
- கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்
- வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
- புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
- கன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
- தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்
- ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்
- காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
- அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்
- நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்
- கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
- ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்
- வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்
- கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
- ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
- தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
- கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்
- சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்
- மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்
- காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
- அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
- படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
- கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.