- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை
- மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து
- படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்
- துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
- பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை
- மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து
- பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண
- நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
- பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண
- நீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து
- பாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண
- இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து
- பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
- கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
- பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை
- விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து
- படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்
- கல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி
- பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண
- அடையா மகிழ்வி னொடும்வந்தால் அம்மா நமது விடயமெலாம்
- படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.