- சென்னை ஏழுகிணறு
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும்
- பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் பத்தியும் எனக்கருள் பரிந்தே
- வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் மணிவளர் அணிமலர் முகத்தாய்
- ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்தம் கடைதொறும்ஓடி
- அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன் அகமலர்ந் தருளுதல் வேண்டும்
- நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே நலந்தரு நசைமணிக் கோவை
- இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- விருந்தினர் தம்மை உபசரித் திடவும் விரவுறும் உறவினர் மகிழத்
- திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும் சிறியனேற் கருளுதல் வேண்டும்
- வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை வாரியே வடிவுறு மயிலே
- இருந்திசை புகழும் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
- நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய்
- விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய்
- எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- மனமெலி யாமல் பிணியடை யாமல் வஞ்சகர் தமைமரு வாமல்
- சினநிலை யாமல் உடல்சலி யாமல் சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
- அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
- இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- * அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக் கிணங்க அருளிச் செய்தது.