- நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுந்து வந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
- பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
- பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
- பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்
- பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
- பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
- படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
- பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
- பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
- பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்
- பராபர மநாமய நிராதர மகோசரம் பரமதந் திரம்விசித்ரம்
- பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோ தயமக்ஷயம்
- பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்ப தித்துவ பரோபரீணம்
- பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப ரம்சிதம் பரவிலாசம்
- பகர்சுபா வம்புனித மதுலமது லிதமம்ப ராம்பர நிராலம்பனம்
- பரவுசா க்ஷாத்கார நிரவய வங்கற்ப னாதீத நிருவிகாரம்
- பரதுரிய வநுபவம் குருதுரிய பதமம் பகம்பகா தீதவிமலம்
- பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற் பதாதீத மின்பவடிவம்
- பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு பவவிலாசப் பிரகாசம்
- பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த பதமகா மௌனரூபம்
- பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
- பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
- பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
- பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
- பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
- பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
- பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
- பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்
- பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
- பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்
- பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
- பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம்
- தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
- சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
- சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
- தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
- சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
- சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
- சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
- தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
- தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
- தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
- தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
- தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
- சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
- சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
- சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
- தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
- தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
- தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
- சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
- தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
- தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
- தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
- சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
- தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
- தவாதசாந் தப்பதந் துவாதசாந் தப்பதந் தருமிணை மலர்ப்பூம்பதம்
- சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலரிதய சாக்ஷியா கியபூம்பதம்
- தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களிற் சமரச முறும்பூம்பதம்
- தருபரஞ் சூக்குமந் தூலமிவை நிலவிய தமக்குளுயி ராம்பூம்பதம்
- சரவசர வபரிமித விவிதவான் மப்பகுதி தாங்குந் திருப்பூம்பதம்
- தண்டபிண் டாண்டவகி லாண்டபிர மாண்டந் தடிக்கவரு ளும்பூம்பதம்
- தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார சகலகர்த் துருபூம்பதம்
- சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா சங்குலவு நற்பூம்பதம்
- மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
- மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
- மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
- வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
- வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
- வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்
- மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
- மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம்
- மறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்
- மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்
- மறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்
- மறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்
- மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
- மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
- மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
- மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்
- மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
- மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
- வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
- வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந் தருளும்பதம்
- வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
- மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
- மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
- மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
- மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
- வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
- மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
- மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
- வஞ்சமறு நெஞ்சினிடை யெஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும்பதம்
- வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடவுண் மந்தணந விற்றும்பதம்
- மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட மாறிநட மாடும்பதம்
- மறக்கருணை யுந்தனி யறக்கருணை யுந்தந்துவழ்விக்குமொண்மைப்பதம்
- இரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்
- எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்
- ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்
- ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்
- ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
- எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
- எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
- எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
- இன்தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறு மிரக்கநடை கொள்ளும்பதம்
- இளைப்புற லறிந்தன்பர் பொதிசோ றருந்தமு னிருந்துபி னடக்கும்பதம்
- எறிவிறகு விற்கவளர் கூடற் றெருத்தொறு மியங்கிய விரக்கப்பதம்
- இறுவைகை யங்கரையின் மண்படப் பல்கா லெழுந்துவிளை யாடும்பதம்
- எங்கேமெய் யன்பருள ரங்கே நலந்தர வெழுந்தருளும் வண்மைப்பதம்
- எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண மன்றே யிரங்கியீந் தருளும்பதம்
- என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணைதந் திதயத் திருக்கும்பதம்
- என்னுயிரை யன்னபத மென்னுயிர்க் குயிரா யிலங்குசெம் பதுமப்பதம்
- என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
- என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
- என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
- என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்
- என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
- என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
- என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
- என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
- என்பொறிக ளுக்கெலா நல்விடய மாம்பதமெ னெழுமையும் விடாப்பொற்பதம்
- என்குறையெ லாந்தவிர்த் தாட்கொண்ட பதமெனக் கெய்ப்பில்வைப்பாகும்பதம்
- எல்லார்க்கு நல்லபத மெல்லாஞ்செய் வல்லபத மிணையிலாத் துணையாம்பதம்
- எழுமனமு டைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட் கின்னமுத மாகும்பதம்
- எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
- ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
- எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
- ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே.