- புள்ளிருக்குவேளூர்
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
- உந்தியே வைகுந்தம்மேல்
- ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
- ஊறலே அமுதம்அவர்தம்
- பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
- பார்வையே கருணைநோக்கம்
- பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
- பரமசுக மாகும்இந்த
- யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
- உறுசுவைப் பழம்எறிந்தே
- உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
- லோரைநிந் திப்பர்அவர்தம்
- வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
- உற்றறிய மாட்டார்களாய்
- உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
- டுறுபிறவி உண்டுதுன்பத்
- தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
- சொர்க்கமுண் டிவையும்அன்றித்
- தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
- துர்ப்புத்தி யால்உலகிலே
- கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
- கொங்கையும் வெறுத்துக்கையில்
- கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
- கொள்ளுவீர் என்பர்அந்த
- வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
- உரைத்தவாய் மைகளைநாடி
- ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
- ஒதிபோல நிற்பதுமலால்
- கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
- காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
- கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
- கலங்கொள்ள வேண்டும்என்பர்
- இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
- இவர்க்கேது தெரியும்என்பர்
- இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
- இட்டகட் டென்பர்அந்த
- வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
- தியங்குவீர் அழியாச்சுகம்
- சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
- சேரவா ருங்கள்என்றால்
- இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
- இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
- இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
- இறுகப்பி டித்தணைக்கப்
- பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
- பெண்ணகப் படுமாகிலோ
- பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
- பிறகிதோ வருவம்என்பார்
- வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
- பேச்சிவை எலாம்வேதனாம்
- பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
- பெரும்புரட் டாகும்அல்லால்
- ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
- ஒருசிறிதும் இல்லைஇல்லை
- உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
- உலர்ந்தீர்கள் இனியாகினும்
- மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
- விரைமலர்த் தொடைஆதியா
- வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
- விளையாடு வீர்கள்என்பார்
- வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
- எண்ணிநல் லோர்கள்ஒருபால்
- இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ர்
- இறைப்பஅது கண்டுநின்று
- ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
- நம்உலகில் ஒருவர்அலவே
- ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
- நகைப்பர்சும் மாஅழுகிலோ
- ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
- உயர்பெண்டு சாக்கொடுத்த
- ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
- உளறுவார் வாய்அடங்க
- மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
- காண்பதே அருமைஅருமை
- கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
- கருணையால் அவர்வலியவந்
- திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
- தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
- கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
- ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
- பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
- புல்லாதி உணும்உயிர்களும்
- போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
- புறச்சுவர் எனப்புகலலாம்
- வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
- விளம்பஎனில் இவ்வுலகிலோ
- மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
- மேவுமண் ணெனினும்உதவக்
- கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
- களவுகட் காமம்முதலாக்
- கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
- கனவிலும் கண்டறிகிலார்
- ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
- அங்கைதாங் கங்கைஎன்னும்
- ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
- வசுத்தநீங் காதுகண்டாய்
- மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
- இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
- ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
- இலங்குமர மியஅணையுமாய்த்
- தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
- தழைத்திடு நிலாக்காலமாய்த்
- தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
- தன்னிசைப் பாடல்இடமாய்
- களவேக லந்தகற் புடையமட வரல்புடை
- கலந்தநய வார்த்தைஉடனாய்க்
- களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
- கழல்நிழற் சுகநிகருமே
- வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.