- திருக்கண்ணமங்கை
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.