- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
- ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
- ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
- தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
- பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்
- பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
- பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
- சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
- தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
- சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
- ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
- அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
- பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- நேரிசை வெண்பா
- ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
- பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
- ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
- மின்திரண்டு நின்றசடை மேல்.