- நாற்பத்தெண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்
- ஒளிபெற விளங்குசுடரே
- உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ
- யோகநிலை அருளுமலையே
- உனதுசெயல் எனதுசெயல் உனதுடைமை எனதுடைமை
- உணர்என உணர்த்துநிறைவே
- உளஎனவும் இலஎனவும் உரைஉபய வசனம்அற
- ஒருமொழியை உதவுநிதியே
- ஒன்றுடன் இரண்டெனவி தண்டைஇடும் மிண்டரொடும்
- ஒன்றல்அற நின்றநிலையே
- உன்னல்அற உன்னுநிலை இன்னதென என்னுடைய
- உள்உணர உள்ளுமதியே
- உன்நிலையும் என்நிலையும் அன்னியம்இ லைச்சிறிதும்
- உற்றறிதி என்றபொருளே
- உண்மைநெறி அண்மைதனில் உண்டுளம்ஒ ருங்கில்என
- ஓதுமெய்ப் போதநெறியே
- அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன
- தகந்தெளிய அருள்செய்தெருளே
- ஐம்பூதம் ஆதிநீ அல்லைஅத் தத்துவ
- அதீதஅறி வென்றஒன்றே
- அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது
- அதீதநிலை என்றநன்றே
- ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ
- அறிதிஎன அருளுமுதலே
- அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
- அறிவித்த சுத்தஅறிவே
- அத்துவித நிலைதுவித நிலைநின்ற பின்னலது
- அடைந்திடா தென்றஇறையே
- ஆனந்த மதுசச்சி தானந்த மேஇஃது
- அறிந்தடைதி என்றநலமே
- அட்டசித் திகளும்நின தேவல்செயும் நீஅவை
- அவாவிஇடல் என்றமணியே
- இலகுபரி பூரண விலாசம்அல திலைஅண்டம்
- எங்கணும் எனச்சொல்பதியே
- இரவுபகல் அற்றஇடம்அதுசகல கேவலம்
- இரண்டின்நடு என்றபரமே
- இச்சைமன மாயையே கண்டன எலாம்அவை
- இருந்துகாண் என்றதவமே
- யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தென்னோடு
- இருத்திஎன உரைசெய்அரைசே
- என்களைக ணேஎனது கண்ணேஎன் இருகண்
- இலங்குமணி யேஎன்உயிரே
- என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
- இருந்தசிவ மேஎன் அன்பே
- என்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று
- எடுத்ததா யேஎன்உறவே
- என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே
- என்அருட் குருவடிவமே
- கலகமனம் உடையஎன் பிழைபொறுத் தாட்கொண்ட
- கருணையங் கடல்அமுதமே
- காழிதனில் அன்றுசுரர் முனிவர்சித் தர்கள்யோகர்
- கருதுசம யாதிபர்களும்
- கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
- களித்துமெய்ப் போதம்உண்டு
- கனிமதுரம் ஒழுகுசெம் பதிகச்செ ழும்சொன்மழை
- கண்ணுதல் பவளமலையில்
- கண்டுபொழி அருள்முகில் சம்பந்த வள்ளலாங்
- கடவுளே ஓத்தூரினில்
- கவினுற விளங்குநற் பணிகள்சிவ புண்ணியக்
- கதிஉல கறிந்துய்யவே
- கரைஅற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடும்
- காட்சியே சிவஞானியாம்
- கருதவரும் ஒருதிருப் பெயர்கொள்மணியேஎமைக்
- காப்பதுன் கடன்என்றுமே.