- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
- அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
- வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
- டஞ்சரையான் கண்கள் அவை.
- வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்
- நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார்
- வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால்
- இனங்காத் தருளாய் எனை.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
- இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
- திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
- விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
- கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
- வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
- விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
- பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
- ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
- வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
- பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
- அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
- மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
- நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
- பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
- வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
- சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
- சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
- வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- மருள்உறு மனமும் கொடியவெங் குணமும் மதித்தறி யாததுன் மதியும்
- இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை எந்தநாள் அடைகுவன் எளியேன்
- அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே அமர்ந்தசிற் பரஒளி நிறைவே
- வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- கேவலசகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி
- ஓவற மயங்கி உழலும்இச் சிறியேன் உன்அருள் அடையும்நாள் உளதோ
- பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரமசிற் சுகபரம் பரனே
- மேவுறும் அடியார்க் கருளிய சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்
- ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
- ஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
- வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
- அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
- தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
- விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.