- திருச்சிற்றம்பலம்
- வஞ்சித்துறை
- ஐங்கரன் அடிமலர்
- இங்குற நினைதிநின்
- பொங்குறு துயரறும்
- மங்கலின் மனனனே.
- குறள் வெண்செந்துறை
- திருமால் அறியாச் சேவடி யாலென்
- கருமால் அறுக்குங் கணபதி சரணம்.
- கலிவிருத்தம்
- துதிபெறு கணபதி இணையடி மலரும்
- பதிதரு சரவண பவன்மல ரடியுங்
- கதிதரு பரசிவன்இயலணி கழலும்
- மதியுற மனனிடை மருவுது மிகவே.
- அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
- பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
- தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
- மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்.
- அற்புதக் கணபதி அமல போற்றியே
- தற்பர சண்முக சாமி போற்றியே
- சிற்பர சிவமகா தேவ போற்றியே
- பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
- ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
- தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
- சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
- கஜமுக குணபதி சரணஞ் சரணம்
- தலைவநின் இணையடி சரணஞ் சரணம்
- சரவண பவகுக சரணஞ் சரணம்
- சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்
- சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
- உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
- உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்.