- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
- இடைவிடா துழலஒளிஓர்
- எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
- இருண்டுயிர் மருண்டுமாழ்க
- நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
- ஞானஅருள் நாட்டைஅடையும்
- நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
- நாயினேற் கருள்செய்கண்டாய்
- விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
- வெளிக்குள்வளர் கின்றசுடரே
- வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
- விஞ்ஞான மழைசெய்முகிலே
- கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
- கருணைநடம் இடுதெய்வமே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக்
- குடிகொண்ட சேரிநடுவில்
- குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு
- குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
- நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள்
- நீர்கொண்டு வாடல்எனவே
- நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான்
- நெறிகொண்ட குறிதவறியே
- போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப்
- புரைகொண்ட மறவர்குடியாம்
- பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில்
- போந்துநின் றவர்அலைக்கக்
- கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில்
- கலங்கினேன் அருள்புரிகுவாய்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம்
- பாம்பாட்டி யாகமாயைப்
- பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம்
- படர்ந்தபிர பஞ்சமாகத்
- திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு
- சிறுவன்யா னாகநின்றேன்
- தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு
- திறத்தன்நீ ஆகல்வேண்டும்
- விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல
- விஞ்ஞான மாம்அகண்ட
- வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத
- விராட்டுருவ வேதார்த்தனே
- கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க்
- கடவுளே சடைகொள்அரசே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
- எய்துகபி றப்பில்இனிநான்
- எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
- இன்பம்எய் தினும்எய்துக
- வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு
- வாழ்வுவந் திடினும்வருக
- வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
- மதிவரினும் வருகஉயர்வோ
- டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
- தெதுபோ கினும்போகநின்
- இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
- எனக்கடைதல் வேண்டும்அரசே
- கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
- கதிமருந் துதவுநிதியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது
- பரமவே தார்த்தம்எனவே
- பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என்
- பாவிமனம் விடயநடையே
- எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும்
- இறங்குவதும் ஏறுவதும்வீண்
- எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள்
- யாவினும் சென்றுசென்றே
- சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது
- சுழல்கின்ற தென்செய்குவேன்
- தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச்
- சுழல்மனம்அ டக்கவருமோ
- கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே
- கண்ணுதற் கடவுள்மணியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.