- பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக்
- கரிசற உணர்ந்து கேட்டுக்
- காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து
- கருநெறி அகன்ற பெரியோர்
- பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு
- புரிபவை எலாம்பு ரிந்துன்
- புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும்
- போதவை எலாம்அ ருளுவாய்
- நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய
- நிறைபவை எலாஞ்செய் நிலையே
- நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும்
- நித்தியா னந்த வடிவே
- அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
- இனிவரு கணப்போ திலே
- இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
- என்செய்கோம் இடியும் எனில்யாம்
- தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
- தீக்கணம் இருப்ப தென்றே
- சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
- திகழ் பரம சிவசத்தியே
- எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
- இமாசல குமாரி விமலை
- இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
- இருந்த ருள்தருந் தேவியே
- அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
- போகாத நாளும் விடயம்
- புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
- புந்திதள ராத நிலையும்
- எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
- என்றும்மற வாத நெறியும்
- இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
- ஏழையேற் கருள்செய் கண்டாய்
- கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
- கோமளத் தெய்வ மலரே
- கோவாத முத்தமே குறையாத மதியமே
- கோடாத மணிவி ளக்கே
- ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
- பதிநிலை அணைந்து வாழப்
- பகலான சகலமுடன் இரவான கேவலப்
- பகையுந் தடாத படிஓர்
- தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
- தமியேன் நடத்த வருமோ
- தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
- சரணமே சரணம் அருள்வாய்
- உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
- உறவான முத்தர் உறவே
- உருவான அருவான ஒருவான ஞானமே
- உயிரான ஒளியின் உணர்வே
- அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
- உற்றிடில் சிறுது ரும்பும்
- உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
- உயர்மறைகள் ஓர்அ னந்தம்
- தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
- தியானம் இல்லா மல்அவமே
- சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
- சேராமை எற்க ருளுவாய்
- களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
- கருணைதரு கலாப மயிலே
- கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
- கலைகி ளரவளர் அன்னமே
- அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.