- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- பரசிவா னந்தபரி பூரண சதானந்த
- பாவனா தீதமுக்த
- பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத
- பௌதிகா தாரயுக்த
- சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய
- சாம்பவ விநாசரகித
- சாஸ்வத புராதர நிராதர அபேதவா
- சாமகோ சரநிரூபா
- துருவகரு ணாகர நிரந்தர துரந்தர
- சுகோதய பதித்வநிமல
- சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ
- சோமசே கரசொரூபா
- அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட்
- டணுவளவும் அறிகிலாத
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
- சுத்தமணியே அரியநல்
- துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
- துலங்குமணி யேஉயர்ந்த
- ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
- தானந்த மானமணியே
- சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
- சமரச சுபாவமணியே
- நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
- நினைவிலமர் கடவுண்மணியே
- நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
- நித்யஆ னந்தமணியே
- ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
- கன்புதவும் இன்பமணியே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்
- பண்படா ஏழையின்சொற்
- பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான
- பரமார்த்த ஞானநிலையை
- கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
- கருணைசெய் தாளாவிடில்
- கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்
- கடவுளே கருணைசெய்வாய்
- தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி
- தந்தஒரு சுந்தரியையும்
- தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய
- சத்தியையும் வைத்துமகிழ்என்
- அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
- றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு
- சாமிசிவ காமியிடமார்
- சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான
- சத்யமொழி தன்னைநம்பி
- எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை
- ஏத்திவினை தனைமாற்றியே
- இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை
- ஏழையேன் ஒருவன்அந்தோ
- சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென்
- செப்புவாய் வேதனாதி
- தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர்
- சித்தர்களும் ஏவல்புரிய
- அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங்
- கருண்முக விலாசத்துடன்
- அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
- நெறிநிற்கும் அன்பர்மனமாம்
- நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
- நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
- வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
- விண்ணே அகண்டசுத்த
- வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
- வேதமே வேதமுடிவே
- தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
- துணைமலர்த் தாட்குரியனாய்த்
- துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
- தோயஅருள் புரிதிகண்டாய்
- ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
- அம்மைசிவ காமியுடனே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- 169. அடிக்குறிப்பு 163 காண்க.