- கட்டளைக் கலித்துறை
- திருச்சிற்றம்பலம்
- கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
- நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
- வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
- ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே.
- அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
- துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
- இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
- செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே.
- தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
- தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
- கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
- யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
- தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
- பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
- பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
- பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே.
- எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
- அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
- பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
- கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே.
- பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்
- செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்
- எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்
- அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே.
- உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்
- என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே
- நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே
- முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே.
- முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
- கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
- வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
- றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே.
- ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
- பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
- ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
- கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே.
- ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
- பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
- வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
- கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே.