- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
- இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
- நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
- உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
- கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
- உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
- மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
- சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.
- கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
- நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
- வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
- எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே.
- கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்
- வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன் என்னுடைய
- உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ
- எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே.
- சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி
- ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
- கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
- ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே.
- பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
- நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
- தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
- தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே.
- வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
- உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
- தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
- கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.
- என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
- உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
- மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
- தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.
- குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
- உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
- நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
- கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே.
- அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
- நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
- பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
- வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே.