- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
- குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
- பொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்
- தரும வெள்விடைச் சாமிநின் நாமமே.
- பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்
- செய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்
- அய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்
- குய்ய வேறுபு கல்இலை உண்மையே.
- கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
- வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
- உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
- கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே.
- வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்
- எஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்
- நெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்
- தஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே.
- பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
- குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
- உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
- கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே.
- மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
- பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்
- கதியின் வைப்பது நின்கடன் வன்கடல்
- வதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே.
- நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
- வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
- பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
- ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.
- சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
- எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
- இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
- தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே.
- உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்
- பொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ
- மின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே
- என்னை நாடிஎ னக்கருள் செய்கவே.
- இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்
- பிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்
- மழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்
- தழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே.
- மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
- பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
- நாட வேறும னையிடை நண்ணிநான்
- வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே.
- மின்னொப் பாகி விளங்கும்வி ரிசடை
- என்னப் பாஎனக் கின்னருள் ஈந்துநின்
- பொன்னொப் பாந்துணைப் பூம்பதம் போற்றியே
- உன்னப் பாங்கின்உ யர்நெறி உய்க்கவே.