- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
- சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
- வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
- நின்மலக்கண் தண்ணருள்தான் நேர்.
- சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
- பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
- வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
- காய்நின்று சந்துரைத்த தார்.
- நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
- கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
- அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
- சந்தோட மோநின் றனக்கு.
- நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
- தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
- அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
- எங்ஙனம்என் றுள்ளம் எழும்.
- ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
- பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
- வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
- தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
- உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
- பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
- விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
- கொடாதே எனைஏன்று கொள்.
- என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
- சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்
- துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
- அன்பர்க் கருள்வோய் அருள்.
- அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
- என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
- உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
- கடையேன் படுந்துயரைக் கண்டு.
- பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
- இகலில் இடையை இரட்டித் - தகவின்
- அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
- திருச்சிற் சபையானைத் தேர்ந்து.
- தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
- தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
- நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
- எந்தாய் எனப்புகழ வே.1
- பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
- கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
- பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
- என்னேநின் தன்மைமன மே.
- இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
- அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
- சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
- கென்னால் உறவே தினி.
- கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
- பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
- கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
- பெரிதார ஓர்மொழியைப் பேசு.
- 173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
- 174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
- 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.