- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
- செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
- மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
- எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
- அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
- துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
- வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
- இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
- ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
- பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
- அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
- இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
- கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
- மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
- பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
- இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.