- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
- விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
- நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
- நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
- எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
- இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
- பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
- தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
- கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
- கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
- அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
- அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
- படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.