- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
- அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
- நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
- நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
- வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
- விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
- தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
- தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.
- திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
- திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
- பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
- பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
- ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
- உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
- தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.