- எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உலக முஞ்சரா சரமும் நின்றுநின்
- றுலவு கின்றபே ருலகம் என்பதும்
- கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற்
- கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
- இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர்
- இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
- திலகம் என்றநங் குருசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
- மனம டங்குசிற் கனந டந்தரும்
- உரமு றும்பதம் பெறவ ழங்குபே
- ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
- பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
- பரம மாகியே பரவு மாமறைச்
- சிரமு றும்பரம் பரசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- நித்தி யம்பரா பரநி ராதரம்
- நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்
- சத்தி யம்கனா கனமி குந்ததோர்
- தற்ப ரம்சிவம் சமர சத்துவம்
- வித்தி யஞ்சுகோ தயநி கேதனம்
- விமலம் என்றுநால் வேத முந்தொழும்
- சித்தி யங்குசிற் கனசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.