- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
- அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
- தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
- தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை
- தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித்
- தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
- எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- திரப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
- தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
- மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
- மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
- கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
- கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
- இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
- திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ர்ப்
- பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல்
- பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
- வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
- மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
- எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
- பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
- பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
- வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
- வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
- ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- காமாந்த காரியாய் மாதர் அல்குல்
- கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
- நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
- நாயகமா மணியேநல் நலமே உன்றன்
- பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
- பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
- ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
- நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
- வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
- வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
- சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
- செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
- என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
- ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
- செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
- தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
- கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
- கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
- எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அரும்பாய நகைமடவார்க் காளாய் வாளா
- அலைகின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
- திரும்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
- திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
- கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
- காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
- இரும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
- அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
- செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
- திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
- நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
- நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
- எம்பாத கத்தைஎடுத் தியார்க்குச் சொல்வேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
- பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
- கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
- கைகுவியேன் மெய்குளிரேன் கண்ர் பாயேன்
- உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
- உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
- எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.