- தலைமகள் பாங்கியொடு கூறல்
- எண்சீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- விண்படைத்த பொழிற்றில்லை183 அம்பலத்தான் எவர்க்கும்
- மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
- பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
- பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
- பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
- பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
- கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
- சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
- வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
- மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
- ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
- ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
- காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
- என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
- தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
- தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
- பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
- பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
- கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
- செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
- அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
- அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
- மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
- மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
- இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
- இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ.
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
- என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
- பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
- பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
- வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
- வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
- வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
- விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ.
- பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
- புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
- கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
- குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
- செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
- திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
- நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
- நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ.
- கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
- கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
- தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
- தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
- பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
- பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
- உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
- உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ.
- ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
- உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
- பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
- பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
- தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
- தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
- கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
- குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.
- தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
- தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
- இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
- என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
- அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
- அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
- துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
- சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ.
- 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.