- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 - திருச்சிற்றம்பலம்
 - உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
 - உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
 - இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
 - இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
 - கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
 - களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
 - அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
 - ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
 - ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
 - உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
 - அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
 - அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
 - களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
 - கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
 - தௌவிண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
 - தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.
 - திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
 - தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
 - வருமாலை மண்ணுறத்தப் பெயர்த்துநடந் தருளி
 - வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
 - தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
 - செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
 - குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
 - குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
 - அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கவந் திறப்பித்
 - தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
 - மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
 - வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
 - ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
 - ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
 - இன்றதுதான் அனுபவித்துக் கிசைந்ததுநா யடியேன்
 - என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.
 - இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
 - தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
 - சுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
 - களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
 - உரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
 - உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
 - அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
 - ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
 - இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
 - இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
 - கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
 - கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
 - மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
 - மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
 - புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
 - பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
 - ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
 - உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
 - மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
 - வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
 - தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
 - தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
 - வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
 - மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
 - நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
 - நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
 - தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
 - தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
 - கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
 - கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
 - கொடுமாலை விடுத்துமகிர் எனத்திருவாய் மலர்ந்தாய்
 - குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.
 - மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
 - மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
 - குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
 - கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
 - கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
 - கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
 - பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
 - பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.
 - அன்றகத்தே அடிவருத் நடந்தென்னை அழைத்திங்
 - கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
 - துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே
 - சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
 - இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
 - தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
 - மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
 - வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே.
 - அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
 - அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
 - வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
 - மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
 - துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
 - தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
 - என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
 - என்உயிருக் குயிராகி இலங்கிசற் குருவே.
 - ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
 - நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
 - காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
 - கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
 - சிலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
 - சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
 - ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
 - அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
 - இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
 - இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
 - மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
 - மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
 - தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
 - திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
 - அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
 - ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
 - கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
 - கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
 - தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
 - துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
 - வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
 - மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
 - தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
 - தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
 - பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
 - பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
 - கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
 - கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
 - சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
 - தாங்குஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
 - மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
 - மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
 - ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
 - உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
 - ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
 - தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
 - பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
 - பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
 - ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
 - அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
 - அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
 - அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
 - கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
 - கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
 - உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
 - உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
 - பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
 - பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
 - காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
 - கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
 - ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
 - உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
 - ஏரணவி உறைகமகிழ்த் தெனஉரைத்தாய் நின்சீர்
 - யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
 - பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
 - பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.
 - துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
 - சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
 - பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
 - பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
 - உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
 - உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
 - பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
 - பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
 - நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
 - நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
 - ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
 - அணிக்கதவந் திறப்பித்துள் என்பொடெனை அழைத்து
 - வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
 - வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
 - கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
 - கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
 - சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
 - தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
 - சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
 - தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
 - மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
 - மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
 - சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
 - சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
 - பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
 - பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
 - சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
 - தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
 - அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
 - அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
 - விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
 - விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
 - செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
 - திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
 - துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
 - உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
 - மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
 - மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
 - ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
 - அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
 - உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
 - உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
 - நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
 - நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
 - எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
 - என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
 - அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிறர்ந் தாட
 - அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.
 - விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
 - விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
 - துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
 - தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
 - களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
 - களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
 - குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
 - குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.
 - வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
 - விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
 - பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
 - போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
 - நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
 - நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
 - ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
 - உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
 - தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
 - தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
 - கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
 - கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
 - இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த
 - என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
 - திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே
 - சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.
 - மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
 - வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
 - ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
 - தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
 - தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
 - தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
 - கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
 - கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
 - படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
 - பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
 - நடைப்புலையேன் பொருட்டாக நடத்திரவிற் கதவம்
 - நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
 - இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
 - இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
 - தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
 - தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
 - முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
 - முழுதிரவில் நடந்தெளியேன் முயங்கமிடத் தடைந்து
 - அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
 - தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
 - என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
 - டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
 - மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
 - வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
 - மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
 - மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
 - சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
 - செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
 - மாதானத் தவர்சூ‘ வாழ்கஎன உரைத்தாய்
 - மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
 - ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
 - ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.
 - வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
 - விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
 - நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
 - நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
 - போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
 - புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
 - சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
 - துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.
 - ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
 - ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
 - அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
 - அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
 - பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
 - பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
 - கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
 - கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
 - விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
 - விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
 - வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
 - மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
 - இந்துநிலை முடிமுதராந் திருஉருவங் காட்டி
 - என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
 - முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
 - முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.
 - நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
 - நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
 - அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்
 - அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
 - சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்
 - சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
 - பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்
 - பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே.
 - புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
 - பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
 - நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
 - நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
 - எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
 - எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
 - தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
 - தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
 - மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
 - முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
 - யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
 - எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
 - தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
 - சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
 - பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
 - புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே.
 - கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
 - கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
 - மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
 - மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
 - நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
 - நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
 - அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
 - அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
 - கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
 - கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
 - மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
 - மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
 - பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
 - பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
 - அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
 - னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
 - அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
 - அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
 - தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
 - சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
 - மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
 - மகிழ்ந்துதிரு அருள்வழியே வார்கஎன உரைத்தாய்
 - இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
 - எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
 - முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
 - முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
 - கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
 - கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
 - பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
 - பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
 - தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
 - தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
 - மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
 - மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
 - பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
 - பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
 - நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
 - நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
 - நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
 - நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே .
 - சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
 - சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
 - கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
 - கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
 - காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
 - கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
 - ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
 - ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே .
 - தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
 - தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
 - எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிட•போந்
 - தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
 - பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
 - புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
 - சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
 - சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே
 - கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
 - கரையாது நிறைந்திருக் கழலடிகள் வருந்த
 - வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
 - விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
 - அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
 - அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
 - நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
 - நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே .
 - ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
 - உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
 - அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
 - அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
 - நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
 - நண்ணநீ எண்ணியவா நடத்துகஎன் றரைத்தாய்
 - இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
 - என்புகல்வேன் மணிமன்றில் இலங்கிசற் குருவே .
 - எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
 - என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
 - பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
 - போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
 - தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
 - தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
 - இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
 - இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே .
 - சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
 - சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
 - மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
 - வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
 - அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
 - அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
 - முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
 - முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே .
 - சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
 - தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
 - பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
 - பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
 - புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
 - பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
 - உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
 - உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே .
 - உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
 - உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
 - கள்ளமனத் தேனிருக்கும் இந்தேடி அடைந்து
 - கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
 - நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
 - நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
 - தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
 - செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே .
 - தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
 - தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
 - பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
 - பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
 - தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
 - தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
 - என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
 - என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
 - அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
 - அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
 - கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
 - கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
 - தொண்டனென் எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
 - துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
 - உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
 - உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
 - அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
 - தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
 - பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
 - பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
 - செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
 - திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
 - பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
 - பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.
 - விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
 - விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
 - கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து
 - கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
 - இடையின்அது நான்மறுப்பு மறுக்கேல்என் மகனே
 - என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
 - உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்
 - உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே.
 - நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்
 - நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
 - ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி
 - யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
 - ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்
 - கறிவிலயேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
 - ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்
 - இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே.
 - அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
 - அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
 - பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
 - போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
 - தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
 - சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
 - மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
 - மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
 - பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
 - பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
 - மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
 - வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
 - தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
 - செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
 - திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
 - திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
 - என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
 - என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
 - தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
 - தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
 - முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
 - முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
 - மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
 - வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
 - பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
 - பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
 - வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
 - வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
 - திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
 - செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
 - உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
 - உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
 - சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
 - துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
 - கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
 - கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
 - என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி
 - என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
 - தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
 - தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
 - முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
 - முடிகள்முடித் துரைகின்ற அடிகள்மிக வருந்தப்
 - பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
 - படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
 - சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
 - திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
 - சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
 - தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
 - எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
 - இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
 - தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
 - தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
 - கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
 - களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
 - உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
 - உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.
 - இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
 - எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
 - எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்
 - இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
 - செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
 - சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
 - உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்
 - உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
 - அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
 - றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
 - என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
 - எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
 - துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
 - தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
 - முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
 - முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
 - மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
 - மோகனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
 - யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
 - உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
 - போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
 - புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
 - நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
 - நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.
 - காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
 - காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
 - பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
 - பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
 - கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
 - குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
 - மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
 - மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.
 - ஆறறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
 - அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
 - வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
 - விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
 - பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
 - பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
 - சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
 - சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.
 - கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
 - காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
 - ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
 - றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
 - துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
 - துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
 - வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
 - வித்தகிநின் திருவருளை வியக்கமுடி யாதே.
 - ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
 - கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
 - சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
 - சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
 - வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
 - விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
 - பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
 - பண்மைபஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.
 - இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
 - எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
 - பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
 - பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
 - மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
 - வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
 - அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
 - ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.
 - உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
 - உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
 - சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
 - சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
 - பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
 - பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
 - நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
 - நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
 - ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
 - அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
 - தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
 - திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
 - கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்
 - களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
 - சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
 - தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.
 - அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
 - ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
 - இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
 - யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
 - மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
 - மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
 - தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
 - சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
 - நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
 - நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
 - தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
 - தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
 - தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
 - தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
 - வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
 - மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
 - யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
 - உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
 - ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
 - என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
 - வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
 - வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
 - மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
 - முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.
 - மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
 - மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
 - மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
 - மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
 - தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
 - தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
 - அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
 - அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
 - இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
 - எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
 - உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
 - உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
 - திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
 - தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
 - குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
 - குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
 - தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
 - சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
 - எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த
 - இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
 - கம்மடியா185க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து
 - கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
 - நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்
 - நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே.
 - உம்பருக்குங் கிடைப்பரிநாம் மணிமன்றில் பூத
 - உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
 - செம்பருக்கைக் கல்லுறத்தத் தெருவில்நடந் திரவில்
 - தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
 - வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
 - மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
 - இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
 - இறைவநின் தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.
 - உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
 - உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
 - துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
 - சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
 - தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
 - சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
 - மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
 - மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
 - பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
 - பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
 - பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
 - போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
 - மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
 - வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
 - ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
 - றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
 - உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
 - உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
 - அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
 - அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
 - களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
 - கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
 - விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
 - விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
 - எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
 - இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
 - தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
 - சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
 - இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
 - எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
 - அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
 - அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
 - மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
 - வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
 - ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
 - றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
 - தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
 - திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
 - வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
 - மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
 - பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
 - பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
 - அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
 - அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
 - வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
 - மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
 - விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
 - விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
 - ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
 - அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
 - சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
 - துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
 - பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
 - படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
 - ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
 - உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
 - பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
 - பத்தரொடு முத்தரெலாம் பாத்தாடப் பொதுவில்
 - ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
 - அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
 - நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
 - நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
 - வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்
 - மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.
 - எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
 - எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
 - அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
 - அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
 - இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
 - எழிற்கதவந் திறப்பித்தங் கொனைஅழைத்தென் கரத்தே
 - சம்மபதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
 - தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.
 - பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
 - போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
 - வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
 - வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
 - நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
 - நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
 - ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
 - என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
 - வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
 - வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
 - தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
 - தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
 - மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
 - மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
 - ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
 - அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
 - புன்றனை தலையெனநான் அறியாமல் ஒருநாள்
 - பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
 - இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
 - இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
 - மன்றலின்அங் கெனைஅழைத்தேன் கையில்ஒன்று கொடுத்தாய்
 - மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
 - பொன்றவிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
 - புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.
 - தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
 - தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
 - வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
 - வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
 - எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
 - தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
 - விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
 - மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
 - எழுத்தினொடு பதமாகி மந்திரமாய் புவனம்
 - எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
 - வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
 - வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
 - அழுத்துறமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
 - ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
 - இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
 - எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.
 - மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
 - வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
 - பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
 - போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
 - தாவிநடந் திரவின்மனைக் கதவுதிப் பித்தே
 - தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
 - நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
 - நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
 - மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
 - மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
 - கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
 - கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
 - உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
 - உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
 - தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
 - தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
 - நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்
 - நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து
 - தொடுங்கவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்
 - துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்
 - கொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்
 - கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்
 - இடுங்கிடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்
 - ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே.
 - வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
 - மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
 - துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
 - துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
 - உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
 - உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
 - வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
 - மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
 - சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
 - சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
 - செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
 - தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
 - பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து
 - பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
 - பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்
 - பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
 - அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா
 - தாட்கொண்டேன் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப்
 - படிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில்
 - படர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப்
 - பிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே
 - பேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய்
 - பொடிநாளும் அணிந்துமணிப் பொதுவில்நடம் புரியும்
 - பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
 - உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
 - உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
 - திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
 - திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
 - இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
 - இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
 - புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
 - பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
 - 185. கம்மடியர் - தொ.வே. - அடிகளார் எழுத்து இவ் விரு வகையாகக் கொள்ளக் கிடக்கிறது. பொருத்தமான பொருள் தருவதைக் கொள்க