- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
- திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
- தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
- தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
- மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
- மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
- குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
- குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.
- என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
- என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
- தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
- தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
- மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
- வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
- உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
- ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
- அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே
- அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
- கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
- களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
- குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
- கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
- மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
- மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.
- விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
- வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்
- கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்
- கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
- அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்
- அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
- மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
- மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே.
- உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி
- உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்பு
- மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை
- மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்
- அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்
- அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
- கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
- கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே.
- பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த
- பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்
- மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக
- வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
- விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்
- விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்
- குழைஅசையக் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே
- கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
- சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
- உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
- உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
- கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
- கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
- கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
- கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
- மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
- வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப்
- பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
- பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.
- உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்
- ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
- முன்னதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்
- முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்
- துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்
- துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன்
- பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்
- பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே.
- 187. இருவர் பெரியர் - பதஞ்சலி, வியாக்கிரபாதர். ச.மு.க.