- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
- சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
- தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
- போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
- பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே
- பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.
- சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
- தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
- செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
- எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
- எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
- பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
- செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
- களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
- நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
- நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.
- அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
- அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
- திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
- புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
- புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
- உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
- ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
- தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
- கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
- எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
- இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.
- பார்பூத்த பசுங்கொடிபொற் பாலைவயர்கள் அரசி
- பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
- சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
- கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து
- கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.
- பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
- பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
- தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
- இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
- தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
- தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
- தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
- தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
- சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
- வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
- உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
- உடையானே நின்னருளின் அ€டாளம் இதுவே.