- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
- இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
- வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
- மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
- அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
- ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
- துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
- தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
- சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
- சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
- நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
- நாய்க்டையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
- பவயோக இந்தியமும் இன்பமய மான
- படிஎன்றால் மெய்யறிவிற் தவர்க்கிருந்த வண்ணம்
- தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.
- சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
- சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
- முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
- மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
- புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
- போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
- பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
- படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
- தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
- சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
- சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்
- தான்நினைத்த போதெனையே நான்நினைத்த நிலையேல்
- ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த
- அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
- உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்
- உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.
- தென்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
- சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
- வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
- மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
- நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
- நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
- நு‘ன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
- நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
- ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
- பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
- பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
- சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
- சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
- ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
- உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
- பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
- பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
- சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
- தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
- சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
- தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
- நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
- நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
- என்பிழையா வையும்பொறுத்தான் என்னைமுன்னே அளித்தாய்ள
- இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
- இன்படி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
- இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
- அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
- அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
- என்புருக மனஞான மயமாகும் என்றால்
- எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.
- கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்
- கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
- விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை
- வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
- இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்
- இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
- அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை
- யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.
- காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
- கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
- வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
- வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
- ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
- அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
- ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
- இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.