- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அக்கோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து
- மிக்கோல மிடவும்அவர்க் கருளாமல் இருளால்
- மிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து
- இக்கோலத் துடனிருந்தேன் அன்பறியேன் சிறியேன்
- எனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்
- தக்கோன்என் றுலகிசைப்பத் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்ஈ புகல்வேன்
- அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து
- நச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன்
- எச்சோடும் இழிவினுக்கொள் றில்லேன்நான் பொல்லேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித்
- தர்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று
- ஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான்
- ஓதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன்
- இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து
- சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
- வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
- எந்தேஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
- எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
- இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
- எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
- தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
- எம்மாயென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
- மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
- வங்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ் தெனக்கும்
- தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
- ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
- உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
- தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
- சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
- சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
- கண்ணர நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
- கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
- எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
- எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
- தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப்
- பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப்
- புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன்
- செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன்
- செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே
- சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி
- என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப
- யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்
- முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்
- முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்
- தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே.
- ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
- மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்
- வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
- பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
- புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
- சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
- இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
- உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
- உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
- கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
- கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
- சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- என்னேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
- இரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து
- முன்னேமெய்த் தவம்புரிந்தார் இன்னேயும் இருப்ப
- மூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன்
- பொன்னேயம் மிகப்புரிந்த புலைக்கடையேன் இழிந்த
- புழுவினும்இங் கிழிந்திழிந்து புகுந்தஎனைக் கருதித்
- தன்னேய முறஎனக்கும் ஒன்றளித்துக் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
- உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
- பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
- பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
- கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
- குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
- தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.