- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
- அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
- பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
- பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
- இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
- எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
- சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
- வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
- எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
- இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
- அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
- அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
- திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
- தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
- நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
- நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
- பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
- பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
- சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
- அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
- மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
- மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
- துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
- துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
- உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
- ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
- கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
- கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
- கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
- கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
- ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
- பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
- ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
- இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
- நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
- நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
- ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
- இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
- பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
- பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
- விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
- விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
- உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
- அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
- பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
- பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
- டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
- இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
- ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
- வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
- புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
- புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
- மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
- விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
- உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
- ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
- செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
- திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
- வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
- மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
- உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
- உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
- அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
- ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
- என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
- யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
- ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.