- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
- குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
- மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
- வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
- நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
- நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
- நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
- விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
- விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
- அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
- அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
- கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
- கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
- களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
- கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.
- அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
- அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
- குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
- கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
- செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
- சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
- எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
- இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.
- இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
- இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
- அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
- அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
- பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
- பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
- தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
- தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
- ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
- ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
- சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
- செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
- மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
- வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
- வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.
- அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
- டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
- புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
- புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
- பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
- பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
- விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
- பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
- பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
- மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
- வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
- வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
- வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
- தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
- தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
- தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
- பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
- பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
- அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
- ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
- நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.
- இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
- இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
- பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
- புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
- நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
- நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
- கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
- காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
- களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
- நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
- நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
- ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
- அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
- கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.