- கலி விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
- நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
- வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
- தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.
- வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
- மால்நிகழ் பேதையேன் மதித்தி லேன் ஐயோ
- தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
- தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே.
- கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
- ஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ
- தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
- மருங்கமர்ந் தன்பருள் மன்னும் வாழ்வையே.
- வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
- பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
- மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
- செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.
- செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
- பழிப்படும் நெஞ்சினேன் பரவி லேன்ஐயோ
- வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
- பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே.
- பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
- வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ
- மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய
- கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே.