- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
- ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
- போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
- புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
- வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
- வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
- பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
- பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
- சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
- சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
- பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
- பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
- நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
- நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
- மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
- வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
- களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
- கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
- விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
- வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
- கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
- குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
- துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
- ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
- திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
- சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
- கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
- காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
- விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
- விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
- தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
- தடைபடுமோ திருவுளந்தான் சற்றும்அறிந் திலனே.
- ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
- அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
- கானந்த மதத்தாலே காரமறை படுமோ
- கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
- ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
- உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
- நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
- நல்லதிரு வுளம்எதுவோ வல்லதறிந் திலனே.
- தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
- சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
- காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
- கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
- பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
- பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
- வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
- மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
- தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
- செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
- காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
- கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
- மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
- விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
- ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
- எப்படியோ திருவுளந்தான் ஏதும்அறிந் திலனே.
- ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
- நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
- ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
- உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
- ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
- இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
- ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
- ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே.