- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
- தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
- எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
- கரைசேர்த் தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
- உரைசேர் மறையின் முடிவிளங்கும் ஒளிமா மணியே உடையானே
- அரைசே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- கண்ணார் அமுதக் கடலேஎன் கண்ணே கண்ணுட் கருமணியே
- தண்ணார் மதியே கதிர்பரப்பித் தழைத்த சுடரே தனிக்கனலே
- எண்ணா டரிய பெரியஅண்டம் எல்லாம் நிறைந்த அருட்சோதி
- அண்ணா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- இத்தா ரணியில் என்பிழைகள் எல்லாம் பொறுத்த என்குருவே
- நித்தா சிற்றம் பலத்தாடும் நிருத்தா எல்லாஞ் செயவல்ல
- சித்தா சித்தி புரத்தமர்ந்த தேவே சித்த சிகாமணியே
- அத்தா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- எம்மே தகவும் உடையவர்தம் இதயத் தமர்ந்த இறையவனே
- இம்மே தினியில் எனைவருவித் திட்ட கருணை எம்மானே
- நம்மே லவர்க்கும் அறிவரிய நாதா என்னை நயந்தீன்ற
- அம்மே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
- திப்பா ரிடைநின் புகழ்பாடு கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
- டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- துப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
- வைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
- ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
- துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
- வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
- திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
- ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.