- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
- உலவா ஒருபே ரருளா ரமுதம்
- தருவாய் இதுவே தருணம் தருணம்
- தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
- வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
- மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
- குருவாய் முனமே மனமே இடமாக்
- குடிகொண் டவனே அபயம் அபயம்.
- என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
- கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
- மன்னே அயனும் திருமா லவனும்
- மதித்தற் கரிய பெரிய பொருளே
- அன்னே அப்பா ஐயா அரசே
- அன்பே அறிவே அமுதே அழியாப்
- பொன்னே மணியே பொருளே அருளே
- பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
- கருணா நிதியே அபயம் அபயம்
- கனகா கரனே அபயம் அபயம்
- அருணா டகனே அபயம் அபயம்
- அழகா அமலா அபயம் அபயம்
- தருணா தவனே அபயம் அபயம்
- தனிநா யகனே அபயம் அபயம்
- தெருணா டுறுவாய் அபயம் அபயம்
- திருவம் பலவா அபயம் அபயம்.
- மருளும் துயரும் தவிரும் படிஎன்
- மனமன் றிடைநீ வருவாய் அபயம்
- இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
- சினன்என் றிகழேல் அபயம் அபயம்
- வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
- விடுமா றருள்வாய் அபயம் அபயம்
- அருளும் பொருளும் தெருளும் தருவாய்
- அபயம் அபயம் அபயம் அபயம்.
- இனிஓர் இறையும் தரியேன் அபயம்
- இதுநின் அருளே அறியும் அபயம்
- கனியேன் எனநீ நினையேல் அபயம்
- கனியே241 கருணைக் கடலே அபயம்
- தனியேன் துணைவே றறியேன் அபயம்
- தகுமோ தகுமோ தலைவா அபயம்
- துனியே அறவந் தருள்வாய் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- அடியார் இதயாம் புயனே அபயம்
- அரசே அமுதே அபயம் அபயம்
- முடியா தினிநான் தரியேன் அபயம்
- முறையோ முறையோ முதல்வா அபயம்
- கடியேன் அலன்நான் அபயம் அபயம்
- கருணா கரனே அபயம் அபயம்
- தடியேல் அருள்வாய் அபயம் அபயம்
- தருணா தவனே அபயம் அபயம்.
- மலவா தனைநீர் கலவா அபயம்
- வலவா திருஅம் பலவா அபயம்
- உலவா நெறிநீ சொலவா அபயம்
- உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
- பலஆ குலம்நான் தரியேன் அபயம்
- பலவா பகவா பனவா அபயம்
- நலவா அடியேன் அலவா அபயம்
- நடநா யகனே அபயம் அபயம்.
- கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
- கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
- முடியேன் பிறவேன் எனநின் அடியே
- முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
- படியே அறியும் படியே வருவாய்
- பதியே கதியே பரமே அபயம்
- அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
- அரசே அருள்வாய் அபயம் அபயம்.
- இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
- இனிநான் தரியேன் தரியேன் அபயம்
- விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
- விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
- உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
- குனவே எனவே அலவே அபயம்
- சுடர்மா மணியே அபயம் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
- குணமே கொளும்என் குருவே அபயம்
- பற்றம் பலமே அலதோர் நெறியும்
- பதியே அறியேன் அடியேன் அபயம்
- சுற்றம் பலவும் உனவே எனவோ
- துணைவே றிலைநின் துணையே அபயம்
- சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
- சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
- 241. களியே - படிவேறுபாடு. ஆ. பா.