- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- தேடிய துண்டு நினதுரு வுண்மை
- தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
- ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
- உரைத்ததும் உவந்ததும் உண்டோ
- ஆடிய பாதம் அறியநான் அறியேன்
- அம்பலத் தரும்பெருஞ் சோதி
- கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
- கூறவுங் கூசும்என் நாவே.
- மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு
- வள்ளலே நின்திரு வரவுக்
- கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்
- இறையும்வே றெண்ணிய துண்டோ
- நடம்புரி பாதம் அறியநான் அறியேன்
- நான்செயும் வகையினி நன்றே
- திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்
- சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.
- நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
- நின்றதே அன்றிநின் அளவில்
- நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
- நோக்கிய திறையும் இங்குண்டோ
- தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
- துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
- தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
- தெளிவித்தல் நின்கடன் சிவனே.
- ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
- என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
- ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
- அன்றிவே றெண்ணிய துண்டோ
- ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் காற்றலேன் சிறிதும்
- தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
- நன்றருள் புரிவதுன் கடனே.
- மாயையாற் கலங்கி வருந்திய போதும்
- வள்ளல்உன் தன்னையே மதித்துன்
- சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
- தலைவவே245 றெண்ணிய துண்டோ
- தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
- துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
- நன்றருள் புரிவதுன் கடனே.
- வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
- மன்னிய உண்மை ஒன்றென்றே
- எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
- திறையும்வே றெண்ணிய துண்டோ
- அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
- அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
- தெளிவித்துக் காப்பதுன் கடனே.
- ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
- உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
- வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
- மன்றினை மறந்ததிங் குண்டோ
- ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
- ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
- பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
- பரிந்தருள் புரிவதுன் கடனே.
- உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
- ஒருசிவ மயமென உணர்ந்தேன்
- கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
- கருத்தயல் கருதிய துண்டோ
- வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
- மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
- தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
- தெளிவித்தல் நின்கடன் சிவனே.
- எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
- இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
- சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
- தனித்துவே றெண்ணிய துண்டோ
- செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
- சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
- இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
- தியற்றுவ துன்கடன் எந்தாய்.
- அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
- அடுத்திடும் புறப்புறம் நான்கில்
- இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
- இறையும்இங் கெண்ணிய துண்டோ
- உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் கினிச்சிறி துந்தான்
- இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
- கென்னைஆண் டருள்வ துன்கடனே.
- 244. சாயையாற் 245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.