- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
- உள்ளனஎ லாங்கலந்தே
- ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
- உதயாத்த மானம்இன்றி
- இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
- ஏகமாய் ஏகபோக
- இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
- இலங்நிறை கின்றசுடரே
- கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
- ககன்எலாம் கண்டபரமே
- காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
- கண்காண வந்தபொருளே
- தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
- துணையாய் விளங்கும்அறிவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
- நிலையிலே நுண்மைதனிலே
- நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
- நெகிழிலே தண்மைதனிலே
- ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
- ஒண்சுவையி லேதிரையிலே
- உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே
- உற்றியல் உறுத்தும்ஒளியே
- காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
- கருணைமழை பொழிமேகமே
- கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
- கண்ணோங்கும் ஒருதெய்வமே
- தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
- சுகசொருப மானதருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
- ஒளியிலே சுடரிலேமேல்
- ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
- உறும்ஆதி அந்தத்திலே
- தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
- செயவல்ல செய்கைதனிலே
- சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
- சிறக்கவளர் கின்றஒளியே
- வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
- வானமே ஞானமயமே
- மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
- வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
- துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
- சுகம்எனக் கீந்ததுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
- ஆதிநடு அந்தத்திலே
- ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
- ஆடும்அதன் ஆட்டத்திலே
- உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
- உற்றபல பெற்றிதனிலே
- ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
- குபகரித் தருளும்ஒளியே
- குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
- கோடிகிர ணங்கள்வீசிக்
- குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
- குலாவும்ஒரு தண்மதியமே
- துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
- சொருபமே துரியபதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
- இயல்உருவி லேஅருவிலே
- ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
- எறிஆத பத்திரளிலே
- ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
- ஒளிஒளியின் ஒளிநடுவிலே
- ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
- ஒளியேஎன் உற்றதுணையே
- அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
- அய்யனே அரசனேஎன்
- அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
- அப்பனே அருளாளனே
- துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
- தூயனே என்நேயனே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
- ஆங்காரி யப்பகுதியே
- ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
- அடியினொடு முடியும்அவையில்
- கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
- கணித்தபுற நிலையும்மேன்மேல்
- கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
- கலந்துநிறை கின்றஒளியே
- கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
- குறியே குறிக்கஒண்ணாக்
- குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
- கொண்டதனி ஞானவெளியே
- தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
- சுகயோக அனுபோகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
- கடையிலே கடல்இடையிலே
- கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
- கடல்ஓசை அதன்நடுவிலே
- வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
- வடிவிலே வண்ணம்அதிலே
- மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
- வயங்கிஅவை காக்கும் ஒளியே
- புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
- புகுந்தறி வளித்தபொருளே
- பொய்யாத செல்வமே நையாத கல்வியே
- புடம்வைத் திடாதபொன்னே
- மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
- மறுப்பிலா தருள்வள்ளலே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
- வாழ்க்கைமுத லாஎனக்கு
- வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
- வயங்கிஒளிர் கின்றஒளியே
- இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
- ரின்பமே அன்பின்விளைவே
- என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
- என்னாசை யேஎன் அறிவே
- கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
- கருணைஅமு தேகரும்பே
- கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
- கடவுளே கலைகள்எல்லாம்
- விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
- மெய்ம்மையே சன்மார்க்கமா
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
- புகல்வழிப் பணிகள்கேட்பப்
- பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
- பொருள்கண்ட சத்தர்பலரும்
- ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
- கிசைந்தெடுத் துதவஎன்றும்
- இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
- றிருக்கஎனை வைத்தகுருவே
- நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
- நலம்பெறச் சன்மார்க்கமாம்
- ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
- நடத்திவரு நல்லஅரசே
- வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
- மாமதியின் அமுதநிறைவே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
- ஏதாக முடியுமோஎன்
- றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
- றேங்கிய இராவில்ஒருநாள்
- மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
- வெளிநின் றணைத்தென்உள்ளே
- மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
- வீற்றிருக் கின்றகுருவே
- நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
- நல்குரவி னோன்அடைந்த
- நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
- நான்கண்டு கொண்டமகிழ்வே
- வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
- வலியவந் தாண்டபரமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
- பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
- பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
- பேதமுற் றங்கும்இங்கும்
- போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
- போகாத படிவிரைந்தே
- புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
- பொருளினை உணர்த்திஎல்லாம்
- ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
- என்பிள்ளை ஆதலாலே
- இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
- றெண்ணற்க என்றகுருவே
- நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
- நிறைந்திருள் அகற்றும்ஒளியே
- நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
- நீதிநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
- நின்வார்த்தை யாவும்நமது
- நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
- நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
- ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
- அழியாத நிலையின்நின்றே
- அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
- ஆடிவாழ் கென்றகுருவே
- நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
- நான்இளங் காலைஅடைய
- நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
- நண்பனே துணைவனேஎன்
- ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
- ஒருவனே அருவனேஉள்
- ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
- ஓங்குநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
- கருணைஅமு தேஎனக்குக்
- கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
- காட்சியே கனகமலையே
- தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
- தலைவனே நின்பெருமையைச்
- சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
- சார்கின்ற தோறும்அந்தோ
- வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
- மதிஎலாந் தித்திக்கும்என்
- மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
- வரும்இன்பம் என்புகலுவேன்
- தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
- தோன்றிட விளங்குசுடரே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.