- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
- மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
- கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
- கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
- வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
- விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
- சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
- கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
- சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
- துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
- சிற்கரை திரையறு திருவருட் கடலே
- தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
- சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே
- என்அறி வேஎன தறிவினுக் கறிவே
- அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே
- அற்புத மேபத மேஎன தன்பே
- பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்
- பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே
- தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
- கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
- தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
- சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
- ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
- அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
- தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
- உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
- கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
- கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
- திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
- சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
- தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
- அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
- கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
- கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
- பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
- பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
- சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சாகாத தலைஇது வேகாத காலாம்
- தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
- போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
- பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
- ஆகாத பேர்களுக் காகாத நினைவே
- ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
- தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- தத்துவ மசிநிலை இதுஇது தானே
- சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
- எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
- ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
- சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
- செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
- சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
- இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
- விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
- மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
- பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
- புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
- சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
- இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
- முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
- முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
- இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
- இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
- தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
- காரண காரியக் கருவிது பலவாய்
- ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
- அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
- பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
- பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
- தாரணி தனில்என்ற தயவுடை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
- பவநெறி இதுவரை பரவிய திதனால்
- செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
- செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
- புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
- புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
- தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
- அடிநடு முடியிலா ததுஇது மகனே
- படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
- பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
- செடியற உலகினில் அருள்நெறி இதுவே
- செயலுற முயலுக என்றசிற் பரமே
- தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நண்ணிய மதவெறி பலபல அவையே
- நன்றற நின்றன சென்றன சிலவே
- அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
- அலைதரு கின்றனர் அலைவற மகனே
- புண்ணியம் உறுதிரு வருள்நெறி இதுவே
- பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
- தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
- அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
- துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
- சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
- விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
- விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
- தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
- மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
- நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
- நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
- ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
- ஏற்றிய கருணைஎன் இன்னுயிர்த் துணையே
- தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
- அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
- கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
- காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
- எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
- எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
- சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
- அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
- ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
- உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
- சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
- சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
- சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே
- கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே
- அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா
- அருள்நிலை தனில்உற அருளிய அமுதே
- பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே
- பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே
- தற்பர பரம்பர சிதம்பர நிதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பவநெறி செலுமவர் கனவிலும் அறியாப்
- பரம்பொரு ளாகிஎன் உளம்பெறும் ஒளியே
- நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே
- நான்அருள் நிலைபெற நல்கிய நலமே
- சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே
- சிவநிலை தனில்உறும் அனுபவ நிறைவே
- தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
- அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
- செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
- திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
- பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
- பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
- தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
- காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
- எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
- இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
- வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
- மாணிக்க மலைநடு மருவிய பரமே
- தருதான முணவெனச் சாற்றிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
- எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
- ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
- ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
- ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
- இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
- சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- 246. சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா.
- 247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க.