- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
- அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
- செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
- தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
- இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
- இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
- மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
- கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
- நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
- நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
- உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
- உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
- வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பே
- ரின்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
- சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
- தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
- அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
- ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
- மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
- நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
- ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
- ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
- வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
- வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
- வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
- நல்லதிருக் கூத்தாட வல்லதிரு வடிகள்
- கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
- கள்ளமற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
- பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
- பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
- மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
- வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
- நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
- நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
- அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
- அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
- வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
- வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
- கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
- கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
- நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
- நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
- வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
- அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
- கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
- குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
- படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
- படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
- மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.