- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
- புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
- வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
- தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
- முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
- பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
- சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
- மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
- விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
- நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
- கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
- உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
- வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த
- புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த
- நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம்
- பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே.
- உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
- புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
- குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
- தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
- தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
- சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
- ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.
- மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
- பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
- நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
- சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
- தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
- துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
- சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
- இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
- கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
- மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
- தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.