- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையும் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
- அச்சமும் அவலமும் உடையேன்
- செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
- திருவுளத் தெனைநினை யாயேல்
- எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
- பிழைபொறுத் தருள்வதுன் கடனே.
- உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
- உடல்பொருள் ஆவியும் உனக்கே
- பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
- பின்னும்நான் தளருதல் அழகோ
- என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
- முறிதல்ஓர் கணம்தரி யேனே.
- தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
- தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
- தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
- தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான்
- எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
- எய்துகேன் யார்துணை என்பேன்
- திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
- திருவுளம் தெரிந்தது தானே.
- தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
- சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
- தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததெந் தாயே
- ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
- அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
- நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
- நடம்புரி ஞானநா டகனே.
- ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
- நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
- ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
- இந்தநாள் அடியனேன் இங்கே
- ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
- உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
- ஏனென வினவா திருத்தலும் அழகோ
- இறையும்நான் தரிக்கலன் இனியே.
- இனியநற் றாயின் இனியஎன் அரசே
- என்னிரு கண்ணினுண் மணியே
- கனிஎன இனிக்கும் கருணையா ரமுதே
- கனகஅம் பலத்துறும் களிப்பே
- துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்
- சோர்வுறு முகமும்கொண் டடியேன்
- தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்
- தந்தநற் றந்தைநீ அலையோ.
- தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
- சாமியும் பூமியும் பொருளும்
- சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
- சுற்றமும் முற்றும்நீ என்றே
- சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததே எந்தாய்
- நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
- நீதியோ நின்அருட் கழகோ.
- அழகனே ஞான அமுதனே என்றன்
- அப்பனே அம்பலத் தரசே
- குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
- கொழுநனே சுத்தசன் மார்க்கக்
- கழகநேர் நின்ற கருணைமா நிதியே
- கடவுளே கடவுளே எனநான்
- பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
- பழங்கணால் அழுங்குதல் அழகோ.
- பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
- பத்தரும் பித்தரும் பிதற்றும்
- கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
- கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
- வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
- மற்றொரு பற்றும்இங் கறியேன்
- சழங்குடை உலகில் தளருதல் அழகோ
- தந்தையுந் தாயும்நீ அலையோ.
- தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
- சபையிலே தனிநடம் புரியும்
- தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
- தூக்கமும் சோம்பலும் துயரும்
- மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
- வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
- நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
- நல்அருட் சோதிதந் தருளே.
- சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
- சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
- நீதியே நிறைநின் திருவருள் அறிய
- நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
- ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
- உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
- ஆதியே நடுவே அந்தமே ஆதி
- நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
- இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
- இயற்கையின் நிறைந்தபே ரின்பே
- அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
- அம்பலத் தாடல்செய் அமுதே
- வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
- வழங்குக நின்அருள் வழங்கல்
- நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
- நான்உயிர் தரிக்கலன் அரசே.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
- புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
- சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
- தூயர்கள் மனம்அது துளங்கித்
- தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
- தனிஅருட் சோதியால் அந்த
- வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
- வழங்குவித் தருளுக விரைந்தே.
- விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
- விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
- கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
- கரைஎலாம் கடந்தது கண்டாய்
- வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
- வல்லவா அம்பல வாணா
- திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
- திகழ்வித்த சித்தனே சிவனே.
- சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
- தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
- நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
- நன்மையும் நரைதிரை முதலாம்
- துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
- சுகவடி வம்பெறும் பேறும்
- தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
- தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
- றிருள்இர வொழிந்தது முழுதும்
- மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
- மங்கல முழங்குகின் றனசீர்ப்
- பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
- பூவையர் புணர்ந்திடப் போந்தார்
- சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
- துலங்கவந் தருளுக விரைந்தே.
- வந்தருள் புரிக விரைந்திது தருணம்
- மாமணி மன்றிலே ஞான
- சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
- சுத்தசன் மார்க்கசற் குருவே
- தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
- தனிஅருட் சோதியை எனது
- சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
- செய்வித் தருள்கசெய் வகையே.