- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
- மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
- கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
- கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
- தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
- தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
- திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
- உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
- அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
- அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
- என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
- என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
- தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
- பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
- மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
- விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
- பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
- பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
- செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
- கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
- நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
- நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
- ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
- இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
- தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
- விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
- ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
- உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
- ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
- எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
- தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
- திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
- கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
- கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
- உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
- தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
- திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.