- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
- இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
- வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
- அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
- தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
- துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
- வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
- உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
- தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
- அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
- வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
- நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
- தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
- காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
- வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
- ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
- தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.
- கரண வாதனை யால்மிக மயங்கிக்
- கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
- மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
- இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
- சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
- சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
- மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
- எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
- தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
- சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
- வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
- கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
- தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
- பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
- மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
- ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
- சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
- கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
- மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
- உயிர் தரித்திடா துன்அடி ஆணை
- தயவு செய்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- 250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம்.
- 251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா.