- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
- அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
- இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
- எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
- தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
- தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
- துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
- சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
- பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
- உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
- உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
- வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
- மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
- நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
- நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
- வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
- மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
- ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
- இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
- மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
- மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
- கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
- முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
- இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
- எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
- அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
- ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
- என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
- என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
- உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
- உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
- என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
- என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
- அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
- அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
- இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
- இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
- நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
- நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
- வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
- மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
- ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
- உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
- பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
- பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
- தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
- சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
- உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
- ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
- கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
- கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
- வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
- விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
- பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
- பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
- துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
- துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
- அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
- அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
- உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
- உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
- கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
- கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
- சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
- தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
- தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
- தானாகி நானாடத் தருணம்இது தானே
- குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
- குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.