- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
- அளித்தெனை வளர்த்திட அருளாம்
- தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
- தெய்வமே சத்தியச் சிவமே
- இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
- ஏற்றிய இன்பமே எல்லாப்
- பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
- சிதம்பர ஜோதியே சிறியேன்
- கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
- கடவுளே கருணையங் கடலே
- சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
- தனக்கறி வித்ததோர் தயையே
- புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
- கற்பங்கள் கணக்கில கடப்ப
- நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
- நித்திய நிற்குண258 நிறைவே
- அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
- அருட்பெருங் கடல்எனும் அரசே
- புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
- சத்திய சாத்தியக் கனலே
- ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
- உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
- நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
- நல்கிய ஞானபோ னகமே
- புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
- அறிவென அறிகின்ற அறிவே
- சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
- துரியநல் நிலத்திலே துலங்கும்
- சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
- செல்வமே சித்தெலாம் புரியும்
- பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தத்துவ பதியே தத்துவம் கடந்த
- தனித்ததோர் சத்திய பதியே
- சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
- தமக்குளே சார்ந்தநற் சார்பே
- பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
- பெறல்அரி தாகிய260 பேறே
- புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
- விளைவெலாம் காட்டிமெய் வேத
- நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
- நோக்கமே ஆக்கமும் திறலும்
- நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
- நாயகக் கருணைநற் றாயே
- போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
- அரும்பெருஞ் சோதியே சுடரே
- மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
- மருந்தெலாம் பொருந்திய மணியே
- உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
- உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
- புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- பரம்பர நிறைவே பராபர வெளியே
- பரமசிற் சுகந்தரும் பதியே
- வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
- வயங்கிய பெருஞ்சுடர் மணியே
- கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
- கருதிய கருத்துறு களிப்பே
- புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
- தரவல்ல சம்புவே சமயப்
- புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
- புண்ணியர் நண்ணிய புகலே
- வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
- வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
- பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே
- முடிபெலாம் கடந்ததோர் முதலே
- தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
- சத்தியத் தனிநடு நிலையே
- மேவிய நடுவில் விளங்கிய விளைவே
- விளைவெலாம் தருகின்ற வெளியே
- பூவியல் அளித்த புனிதசற் குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
- விளம்பிய அனுபவ விளைவும்
- போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
- போனது மாய்ஒளிர் புலமே
- ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
- விருநிலத் தியல்அருள் ஒளியால்
- பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
- அருள்வடி வெடுத்தெழுந் தருளி
- நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
- நிலைஎலாம் அளித்தமா நிதியே
- மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
- வயங்கநல் வரந்தந்த வாழ்வே
- பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
- இதயத்தில் இருக்கின்ற குருவே
- அன்புடை அரசே அப்பனே என்றன்
- அம்மையே அருட்பெருஞ் சோதி
- இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
- என்னுயிர் நாதனே என்னைப்
- பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சத்திய பதியே சத்திய நிதியே
- சத்திய ஞானமே வேத
- நித்திய நிலையே நித்திய நிறைவே
- நித்திய வாழ்வருள் நெறியே
- சித்திஇன் புருவே சித்தியின் கருவே
- சித்தியிற் சித்தியே எனது
- புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
- சிவபத அனுபவச் சிவமே
- மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
- மதிநிறை அமுதநல் வாய்ப்பே
- சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
- சாமியே தந்தையே தாயே
- புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைவளர் கலையே கலையினுட் கலையே
- கலைஎலாம் தரும்ஒரு கருவே
- நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
- நித்திய வானமே ஞான
- மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
- மாபலம் தருகின்ற வாழ்வே
- புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
- விளக்கமே விளக்கத்தின் வியப்பே
- கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
- கருணையே கரிசிலாக் களிப்பே
- ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
- அற்புதக் காட்சியே எனது
- பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- காரண அருவே காரிய உருவே
- காரண காரியம் காட்டி
- ஆரண முடியும் ஆகம முடியும்
- அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
- நாரண தலமே263 நாரண வலமே
- நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
- பூரண ஒளிசெய் பூரண சிவமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- 258. நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 259. சற்புதர் - நல்லறிவுடையவர்.
- 260. பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
- 261. தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 262. முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
- 263. தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.