- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
- என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
- நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
- நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
- கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
- காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
- செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
- என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
- பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
- பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
- அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
- அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
- சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
- நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
- நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
- பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
- பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
- திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
- இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
- எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
- பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
- பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
- செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
- சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
- மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
- மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
- ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
- எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
- தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
- துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
- மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
- மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
- ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
- ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
- தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
- எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
- அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
- அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
- ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
- ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
- செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
- சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
- நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
- நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
- பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
- பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
- சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- 267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு.